இது நவநாகரீக யுகம். மேட்சிங் மோகம் ஆண்களை விட பெண்களையே அதிகமாக ஆட்டிப் படைக்குது.
சிவப்புக் கலர்ல புடவையும் அதே கலர்ல ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு கிச்சன்லே உட்கார்ந்திருச்சி. புருஷன்காரன் பயந்து போயிட்டான்.
இப்படி உட்காராதேடி எம்ப்டி கேஸ் சிலிண்டர்-னு நினைச்சி சிலிண்டர் கொண்டு வர்றவன் தூக்கிட்டு போயிடப்போறhன் அப்படின்னுட்டான்.
அந்தம்மாவுக்கு கோபம் வந்திருச்சி. கேஸ் சிலிண்டர்னு சொன்னதுக்குக் கூட இல்லை. எம்ப்டி சிலிண்டர்-னு எப்படிச் சொல்லலாம்-னுதான்.
அன்னைக்கு ஒரு வீட்டிலே கணவனும், மனைவியும் சினிமாவுக்குப் புறப்பட்டாங்க.
அந்த அம்மா பச்சை சாத்துற படலத்திலே மூழ்கிட்டாங்க. புடவை பச்சை, ஜாக்கெட் பச்சை, வளையல் பச்சை, கம்மல் பச்சை, ரிப்பன் பச்சை, நெக்லஸ் பச்சை கைப் பை பச்சை.
திருப்தி ஏற்படலை செருப்பு பச்சையா அமையலை. நல்லவேளை அவரோட ஹவாய் செருப்பு வார் கொஞ்சம் பச்சை அதைக் கொடுத்து சமாளிச்சு நிம்மதியா பெருமூச்சு விட்டார் கணவர்.
பஸ் ஸ்டாப்புக்கு வந்ததும் பிரச்சினை பெரிசாயிடுச்சி. சிவப்பு கலர்லே டவுன் பஸ் வந்திச்சி. ஏறுவோம்னார் அவர். வேணாம், பச்சை கலர் பஸ் வரட்டும்-னாங்க அந்தம்மா.
அந்த பஸ் நாம போற தியேட்டருக்குப் போகாதும்மா
அப்போ தியேட்டரை மாத்துங்க அப்படின்னாங்களே பார்க்கலாம்
இந்த மேட்சிங் மோகம் வந்ததினாலே தான் ஜிமிக்கி எல்லாம் இப்போ அமுக்கியா மாறிடுச்சி. புடவைக்கு மேட்சா ஒண்ணை வாங்கி காதுலே அமுக்கிடறாங்க.
புடவை எடுத்து முடிக்கவே ஒரு யுகம் ஆகும். அதுக்கு மேட்சா ஜாக்கெட் பிட் எடுக்க அலைவாங்க. அது அதைவிடக் கொடுமையானது. கடைக்காரர் அந்தப் புடவையைக் கையிலே வச்சிகிட்டு ஜாக்கெட் துணி இருக்கிற பீரோவிலே தீபாராதனை காட்டுற மாதிரி வச்சி வச்சி எடுப்பார் பாருங்க ரொம்ப வேடிக்கையா இருக்கும்.
இப்படித்தான் ஒரு ஜாக்கெட் பிட் எடுக்க புருஷனும், பெண் ஜாதியும் கடை கடையா ஏறி இறங்கினாங்க.
கட்டியிருக்கிற புடவைக்கு மேட்சா ஒரு ஜாக்கெட் துணி கொடுங்கன்னு அந்த அம்மா கேட்க, கடைக்காரர் ஒவ்வொரு பிட்டா எடுத்து இந்த அம்மா மேலே வச்சி வச்சி பார்க்க, புருஷன்காரன் மனசு படபடன்னு துடிக்க ஆரம்பிச்சது.
கடைசியிலே கடைக்காரர், அம்மா உங்களுக்கு எதுவுமே மேட்ச்சா அமையலை-ன்னு சிம்பாலிக்கா சொல்ல, ஆமா அது சரிதான்னு சொல்லி அந்தம்மா புருஷனைத் திரும்பிப் பார்த்து பெருமூச்சு விட ஒரே ரகளைதான் போங்க.
ஒரு நடிகையிடம் ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார்.
உங்களுடைய கூந்தல் கருமையாக, பளபளவென்று நீளமாக இருக்கிறதே, நீங்கள் உங்கள் கூந்தலை எப்படி பராமரிக்கிறீர்கள் ?
ஓ... அதுவா. காலையில் குளிக்கும்போது நன்றாக ஷாம்பூ போட்டு கூந்தலைக் கழுவுகிறேன். பிறகு ஃபேன்லே காய வைக்கிறேன். பகலெல்லாம் தூசு தும்பு படாமல் பத்திரமாகப் பாதுகாக்கிறேன். இரவு படுக்கப் போகும்போது மட்டும் கழட்டி ஆணியிலே மாட்டி விடுகிறேன்.
நிருபர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். பின்னே சவுரி முடி அப்படித்தானே இருக்கும். அதுக்கு அந்தப் பெயர் வந்ததே பொருத்தம்தான். சவுரியம்னே வச்சிக்கலாம், சவுரியமில்லாட்டி கழட்டி ஆணியிலே மாட்டிரலாம்.
ஓரு வீட்டிலே புருஷன் தன் பெண்டாட்டிகிட்டே, இந்தாடி இந்த சவுரி முடி நானே என் கையாலே தயாரிச்சது வச்சுக்கோ என்றார்.
அதுக்கு அந்த அம்மா இவ்வளவு முடி வச்சி எப்படி தயாரிச்சீங்கன்னு ஆச்சரியமா கேட்டுது.
தினம் நீ போடுற சாப்பாட்டிலே கிடக்கிற தலைமுடியை எடுத்து கலெக்ட் பண்ணித்தான் இது செஞ்சேன் அப்படின்னார் அவர்.
இப்போ சவுரி முடி எதுக்கெல்லாம் பயன்படுது தெரியுமா ? நாமெல்லாம் பஸ்சிலே இடம் பிடிக்க கைக்குட்டையைப் போடுவோம். துண்டைப் போடுவோம். ஒரு அம்மா சவுரிமுடியைப் போட்டு வச்சிருந்திச்சி. அப்புறம் கூட்டத்திலே முண்டியடிச்சி பஸ்சுக்குள்ளே ஏறிப் போய் சீட்டிலே உட்காரப் போனா பக்கத்து சீட்டு அம்மா உட்கார விடலை. ஏன்னா அடையாளம் மாறிப்போச்சே.
பஸ் பயணத்திலே இன்னொரு சம்பவம். ஆணும், பெண்ணுமா பல பேரு பஸ்சிலே கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க ஸ்டாப் வந்ததும் டிரைவர் சடன் பிரேக் போட்டார். பஸ் குலுக்கத்திலே பலபேரு தடுமாறி மேலே கம்பியைப் பிடிச்சிக் கிட்டாங்க. சிலபேர் குழப்பத்திலே முன்னாடி நின்ன பொண்ணுங்களோட ஜடைகளைப் பிடிச்சிக்கிட்டாங்க. ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்க. ஜடைகளெல்லாம் அவங்க கையிலே இருக்க, பொண்ணுங்க இறங்கிப் போயிட்டே இருக்காங்க.
ஒரு காலத்தில் பெண்களோட கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா இல்லையான்னு ஆராய்ச்சி நடந்துச்சாம். இப்போ கூந்தலே இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி நடத்த வேண்டியிருக்கலாம். அந்த காலத்திலே பெண்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டா தரை வரைக்கும் வந்து விழுமாம். இப்போ தரையிலே விழுந்துடுதாம்.
முடி மட்டுமா போலி ? ஒரு காதலன் தன்னோட காதலியோட பல் அழகிலே மயங்கி உனக்கு முத்துப் போல் பல்லு-ன்னு மூச்சுக்கு மூச்சு சொல்ல ஆரம்பிச்சிட்டான். அவள் ஒருநாள், அட இருய்யா-ன்னு கழட்டி கையிலே கொடுத்துட்டா.
பெண் பார்க்கப் போன இடத்துல பையனோட அம்மா சீக்கிரம் பொண்ணைக் கூப்பிடுங்க-ன்னு சொன்னதும் பெண்ணோட அப்பா படபடன்னு சொல்ல ஆரம்பிச்சார்.
கொஞ்சம் பொறுங்க. சாயந்தரமா வர்றோம்னு சொல்லிட்டு இப்படி காலையிலேயே வந்துட்டீங்க. அவள் கண் டாக்டரையும், பல் டாக்டரையும் கன்சல்ட் பண்ணிட்டு, அப்படியே பியூட்டி பார்லர்லே ஹேர்டையும் பண்ணிட்டு வந்துடறேன்னு போனா. இப்ப வந்திடுவா. மறுநிமிடம் பொண்ணு பார்க்க வந்தவங்க அந்த இடத்திலே இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment